காவிரி கிருஷ்ணராஜ சாகர் அணை
காவிரி கிருஷ்ணராஜ சாகர் அணை

15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு!

காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு நொடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, காவிரி ஆற்றில் வரும் 15 நாள்களுக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இருபத்தி மூன்றாவது கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து விவாதிக்கும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தில், தமிழகத் தரப்பின் சார்பில், காவிரியிலிருந்து நொடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால், தண்ணீரைத் திறந்துவிட மறுத்த கர்நாடக அரசுத் தரப்போ, மாநில அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்தவிட முடியாது என்று தெரிவித்தது.

அந்த மாநிலத்தில் 47 சதவீத அளவுக்கு மட்டுமே இப்போது தண்ணீர் இருப்பதாகவும், குடிநீர்த் தேவைக்கே இது போய்விடும் என்றும் கர்நாடகத் தரப்பின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்கே கல்ச்சர் தலைமையில் கூடிய ஆணையம், இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, காவிரியிலிருருந்து அடுத்த 15 நாள்களுக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி வரை தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com