5000 ஏக்கர் பல்லுயிரிய நிலத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதா?

அரிட்டாபட்டி சுற்று வட்டாரம்
அரிட்டாபட்டி சுற்று வட்டாரம்
Published on

உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரியமிக்க சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; தமிழ்நாட்டு மக்களின் தொன்மை, வரலாறு, சுற்றுச்சூழல், பல்லுயிரிய வளத்தை சீரழிக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய, சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் டங்ஸ்டன் கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது.

கடந்த 7ஆம் தேதி அன்று சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 4வது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளது.

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஏலத்தில் எடுத்துள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பானது, தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதியாகும்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் கனிமச் சுரங்கம் அமைக்கக்கூடாது என பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிப்பிட்ட நிலப்பரப்பில், 2,300 ஆண்டுகள் தொன்மையான மாங்குளம் தமிழிக் கல்வெட்டும்,  அக்கல்வெட்டில் சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகளும், அதில் செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் ஈரமாயிரமாண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டு காணப்படுகிறது.

அரிட்டாபட்டி கழிஞ்ச மலையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை கோயில் அமைந்துள்ளது. கிபி. எட்டாம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இதுவாகும்.

மீனாட்சிபுரம் ஓவா மலையில் உள்ள நான்கு குகை தளத்தில், 40க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் 20-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.

கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம பாண்டிய மன்னர் காலத்து சிவன் கோயில் அரிட்டாப்பட்டியில் உள்ளது. அரிட்டாபட்டி காமன்குளம் கண்மாயில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் காணப்படுகிறது. கழிஞ்சமலையின் வடக்கு முனையில் 200 ஆண்டுகள் பழமையான ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள்ளது.” என விவரித்துள்ளார். 

மேலும், ”அரிட்டாபட்டி உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது.

இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள், வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.

பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேற்குச் சரிவும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பகுதிக்குள் வருகிறது. சுமார் 5.5 கி.மீ நீளமும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட  அந்த மலை, புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டு பூனை, மரநாய் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் வாழிடமாக விளங்குகிறது.” என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். 

”கடந்த 22.11.2022 அன்று தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்கப்பட்ட கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை  ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளும், 5000 ஏக்கர் சுரங்கம் ஏலம் விடப்பட்ட பகுதியில் வருகிறது.

இச்சூழலில், ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனத்தின் டங்ஸ்டன் கனிமம் சுரங்கம் அமைக்கப்பட்டால், தமிழி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக்கோயில்கள், அரிட்டாபட்டி உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலம், 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள், 3 தடுப்பணைகள் காணாமல் போகும். பறவைகள், விலங்குகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இன்னும் சொல்லப்போனால், தமிழ் மக்களின் வரலாற்று சின்னமாக இருக்கிற தொல்லியல் சின்னங்கள் அழியும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் தொன்மை, வரலாறு, சுற்றுச்சூழல், பல்லுயிரிய வளத்தை சீரழிக்கும், வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனத்தின் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கான அனுமதியை, ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்திற்கான எவ்வித அனுமதியையும் தமிழ்நாடு அரசு வழங்கக்கூடாது.” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com