58 சதவீத நாடுகளில் மாணவர்களுக்கு செல்போன் தடை!

58 சதவீத நாடுகளில் மாணவர்களுக்கு செல்போன் தடை!
Published on

உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யுனெஸ்கோவின் உலக கல்விக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. படிப்பில் கவனக்குறைவு, இணையவழியில் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாட்டால் ஆண் சிறுவர்களைவிட பெண் சிறுவர்களுக்கு சாப்பிடுதல் கோளாறு இரண்டு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதன் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் விடலைப் பருவப் பெண் பிள்ளைகளில் 32 சதவீதம் பேர் தங்கள் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு முக்கிய சமூக ஊடகமான டிக்டாக்கின் அல்காரிதமோ கவலைக்குரிய அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. விடலைப் பருவத்தினரைக் குறிவைத்து ஒவ்வொரு 39 நொடிகளுக்கும் உடல் தொடர்பான உள்ளடக்கத்தைக் காண்பிக்கிறது என்றும் எட்டு நிமிடங்களுக்கு ஒருமுறை உண்ணுதல் கோளாறுக்கு உள்ளாகும்படியான உள்ளடக்கத்தைக் காட்டுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில்தான், உலக அளவில் 58 சதவீதம் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 114 கல்விசார் அமைப்புகள் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தேசிய அளவில் தடை விதித்துள்ளன. அதுவும், அண்மைக் காலமாக இது விரைவாக நடந்துவருகிறது. கடந்த 2023 ஜூனில் மட்டும் நான்கில் ஒரு பங்கு நாடுகளில் அதாவது 24 சதவீத நாடுகளில் செல்போன் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக, யுனெஸ்கோ கல்விக் கண்காணிப்புக் குழுவின் ஆய்வறிக்கை அந்த ஆண்டில் வெளியிடப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2025இல் இது 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் இந்த மாதம் நிலவரப்படி இதில் 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றும் யுனெஸ்கோ கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com