
தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே உள்ள புற்றுநோய்ச் சிகிச்சையை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக பதினாறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக 59 புற்றுநோய்ச் சிகிச்சை வல்லுநர்களை நியமிக்க நிர்வாக, நிதி ஒப்புதலை அரசு அளித்துள்ளது.
இதற்கான உத்தரவை சுகாதாரத் துறைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார் நேற்று பிறப்பித்தார்.
இத்துடன், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முதுநிலை, இளநிலை இருப்பிட மருத்துவர்கள் பணியிடங்களை அரசுக்கே திரும்ப ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்மொழிவை அரசுக்கு மருத்துவக் கல்லூரி இயக்குநர் அனுப்பியதாகவும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள், அதிகரித்துவரும் இளையோர் புற்றுநோய் தாக்கச் சூழலில் போதுமான அளவுக்கு மருத்துவ வல்லுநர்கள் இல்லாத நிலையில், தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். அதை ஏற்று சுகாதாரத் துறை 16 கோடியே 8 இலட்சத்து 8 ஆயிரத்து 250 ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போதைய சூழலில் நோயாளிகள், சென்னை அரசு இராயப்பேட்டை மருத்துவமனை, காஞ்சிபுரம் மாவட்டம் அரசு அண்ணா புற்றுநோய் மருத்துவமனை முதலிய சிலவற்றைத் தவிர வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள், பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டியுள்ளது.
பொருளாதார வசதியற்றவர்கள் கடன்களை வாங்கியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் உறவுகளைக் காப்பாற்ற பெரும் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களில் சிறிதளவினருக்காவது இந்த நியமனம் மகிழ்ச்சியைத் தரும் என்பது சந்தேகமில்லை.