6 மாவட்டங்களில் இன்று மிக கன மழை; 8 மாவட்டங்களில் கன மழை!
தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவரும் நிலையில், நாளை ஆறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, வானிலைஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று நண்பகல் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
”தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்தத் தாழ்வுப்பகுதி மேற்கு- வட மேற்குத் திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நாளை 15ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.” என்றும்,
”அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
”தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்குழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமானது முதல் மிக கனமானதுவரை மழை பெய்யும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு.” என்றும் வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.