திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் காரும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சேலம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா (33). இவருடைய கணவர் முகிலன் (35), தந்தை ஈஸ்வரன் (55), தாய் திருமகள் (50), பாட்டி சிவகாமி (65) , ஹேமாவின் குழந்தைகள் ஸ்ரீநித்து (3), கனிஷ் (9 மாதங்கள்) ஆகியோர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தங்கள் உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஒரே காரில் சென்றுள்ளனர்.
நேற்று மாலை துக்க நிகழ்வு முடிந்தபின்னர், பல்லடத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக சேலம் சாமிநாதபுரத்துக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஊத்துக்குளி அருகே காக்காபள்ளம் என்ற இடத்தில் சென்ற போது, விஜயமங்கலத்திலிருந்து வந்த டீசல் டேங்கர் லாரியும் இவர்களது காரும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்தது.
காரில் பயணம் செய்த ஹேமாவைத் தவிர, மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ஹேமா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான டேங்கர் லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர்.