தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 63 இலட்சம் பேர் தகுதியே இல்லாதவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய அத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இத்தகவலைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் முறையாக நடத்தப்படவில்லை என்றும் கடந்த ஆட்சியில் சேர்க்கப்பட்டு தற்போதுவரை மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சத்து 26 ஆயிரத்து152 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இவர்களில் 63 இலட்சத்து 22 ஆயிரத்து 288 பேர் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஆதார் அட்டை, ரேசன் அட்டை இணைக்கப்பட்டு வருவதாகவும் 59 சதவீதம் அளவுக்கு இந்தப் பணி நிறைவடைந்துவிட்டது என்றும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்றும் பெரியகருப்பன் தெரிவித்தார்.
விவசாயிகள், ஏழை எளிய நடுத்தர மக்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்து தரப்பினரின் பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் கூட்டுறவுத் துறை மூலம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.