”சமூகநீதி தமிழ்நாட்டின் மூச்சுக் காற்றைப் போன்றது; தமிழ்நாட்டின் ஆரோக்கியமான சீரான வளர்ச்சிக்குக் காரணமானது, அதிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு - இந்தியாவில் வேறெவருக்கும் கிடைக்காத பொதிகைத் தென்றல். இதில் தொடர்ந்து விழிப்பாக இருக்கவேண்டும்.” என்று திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
”திராவிடர் கழகம் வழிகாட்டியதன் விளைவாக, தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட 1994-ஆம் ஆண்டின் 45-ஆம் சட்டமும், இந்திய அரசியலமைப்பின் 31 சி பிரிவின் படி, அதற்கான ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்பும், நச்சுக்காற்றுகளை அனுமதிக்காத பல்லடுக்குக் கோட்டைச் சுவர்கள்! இந்தக் கோட்டையில் ஓட்டை போடும் முயற்சி 33 ஆண்டுகளாக நின்றபாடில்லை. கோட்டைச் சுவருக்கு ஆபத்து என்ற கூப்பாடு உள்ளிருந்தே பலரை அச்சுறுத்தப் பார்க்கிறது. ஆனால், அதைக் கட்டியவர் மேலிருக்கும் மக்களின் நம்பிக்கையும், அதற்கு அணுவளவும் ஊறு நேராமல் 360 டிகிரியிலும் கண்ணும் கருத்துமாய் செயல்படும் அவரின் கவனமும் தமிழ்நாட்டு மக்களை நிம்மதியாக உறங்கச் செய்கின்றன. அடுத்தடுத்த தலைமுறைகள், அந்தச் சமூகநீதிக் கோட்டைக்கு அடித்தளம் இட்டது யார்? கட்டி முடித்துக் காத்துவரும் காவலர் யாரென்பதை அறியாமலே அனுபவிக்கின்றனர்.
மண்டல் கமிஷன் செயல்படுத்தப்பட்டதை ஏற்று ‘பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கலாம்’ என்று இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு, அங்கிருந்தே சில ஈட்டிகளை எறிந்தது. 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது அவற்றில் ஒன்று. அதற்கு முன்பே பல ஆண்டுகளாக 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறையில் வைத்திருந்த தமிழ்நாட்டுக்குப் பேராபத்தாக அத் தீர்ப்பின் பகுதி அமைந்த நிலையில், அதைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி ‘தனி வெற்றி வரலாறு’ ஆனது. அரசாணையாக மட்டுமில்லாமல், இட ஒதுக்கீட்டுக்குச் சட்டவடிவம் தர வேண்டும் என்ற பெரியாரின் கனவை நிறைவேற்றி, மூன்று பார்ப்பனர்களைக் கொண்டே, (அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார், பிரதமர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா) முடங்கிப் போயிருந்த நாடாளுமன்றத்தை இந்தச் சட்டத்திற்காகவே கூட்டி, எவர் ஒருவரின் எதிர்ப்பும் இன்றி, 76-ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைச் செய்ய வைத்துச் சமூகநீதியைக் காத்த சாதனையாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! அதற்குப் பின் எத்தனை எத்தனையோ வழக்குகள், இழுத்தடிப்புகள், மிரட்டல்கள், குறுக்குச்சால்கள், கைக்கூலி வேலைகள் இன்றும் தொடர்கின்றன. அந்தக் கோட்டையின் ஒரு கல்லையாவது பெயர்த்து எடுத்துவிட மாட்டோமா என்று ‘கடப்பாறைகள்’ மோதிப் பார்க்கின்றன. 1994-ஆம் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு 16 ஆண்டுகள் நடைபெற்று 2010-ஆம் ஆண்டே ‘‘69 சதவிகிதம் வழங்கிய தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்’’ என்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ண ராவ், சுவதந்திர குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அந்த அமர்வு கேட்டிருந்த அளவிடற்குரிய தரவும் (Quantifiable Data), அடுத்த ஆண்டே வழங்கப்பட்டுவிட்டது. எனினும், மீண்டும் அச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், மாநில சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது (ultra vires) என்றும் அறிவிக்கக் கோரி, கடந்த 2012-ஆம் ஆண்டு சி.வி.காயத்ரி என்றொருவரும், 2015-ஆம் ஆண்டு என்.மெய்யம்மையும் மற்றொருவரும், அதே ஆண்டு பூஜாலட்சுமி என்றொருவரும் தொடுத்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நேற்று (27.5.2026) விசாரணைக்கு வந்தன. அவற்றில் பின்னிரு வழக்குகளைத் தொடுத்தவர்கள், தங்கள் கல்வியை முடித்துவிட்டதால், இனி அவற்றை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று வழக்கை ரத்து செய்துவிட்டது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு. ஆனால், முதல் வழக்கு ஜூலை மாதத்தில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.
தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீடு பலரின் கண்களை உறுத்திக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்! இதை முன்னுதாரணமாகக் கொண்டு பிற மாநிலங்களும் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த முனைவதாலும், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இட ஒதுக்கீட்டின் காரணமாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் பயன்பெறுவதையும், உள் இடஒதுக்கீடுகள் சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் உரிய நீதி பெற்றுத் தருவதையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இதற்குத் தடை ஏற்படுத்தும் முயற்சிகளில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பதையும் கூட நாம் அறிவோம்.
ஒரு முறை திராவிடர் கழகத் தலைவர் சொன்னார். “இது திராவிடர் கழகம் உயிர் கொடுத்து உருவாக்கிய குழந்தை. 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்குக் கூடுமானவரை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் கை வைக்க எவருக்கும் துணிச்சல் வராது. மீறி கை வைத்தால், கருஞ்சட்டைகளின் செயல்திறன் என்ன, தமிழ்நாட்டின் போர்க் குணம் என்னவென்பதை அப்போது இந்நாடு பார்க்கும்.” என்று! அதற்கு அவசியமில்லை என்பதை இப்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. சட்டப்படி நீதிமன்றங்கள் நடக்கும் வரை 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆபத்தில்லை எனினும் ‘நிலையான விழிப்புணர்வே நீடித்த சுதந்திரத்திற்கான விலை’ என்பதைத் தமிழ்நாடு அரசும், சமூகநீதியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.