சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி-பதில் நேரம் தொடக்கத்தில் இடம்பெறும். இதில்தான் பெரும்பாலும் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு வேண்டியவற்றுக்கு கோரிக்கைகளை எழுப்பி தீர்வு காண முயல்வார்கள்.
பதில்தர வசதியாக அந்தக் கேள்விகள் குறிப்பிட்ட துறைகளின் அமைச்சர்களுக்கு சட்டப்பேரவைச் செயலகத்தால் அனுப்பிவைக்கப்படும்.
இந்த ஆட்சியில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி-பதில் பகுதி தொடராக இன்னும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், இதைப் பற்றி அவையில் இன்று விளக்கம் ஒன்றை அளித்தார், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்.
பேரவை உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 8,299 கேள்விகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 728 கேள்விகள் நட்சத்திரக் குறியிடப்பட்டு உரிய துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன என்றும் அதில் 172 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கிடைத்துள்ளது என்றும் இந்த மந்தநிலையைப் போக்கி உரிய நடவடிக்கையை அமைச்சர்களும், தலைமைச்செயலாளரும் எடுக்கவேண்டும் என்றும் பேரவைத்தலைவர் அவையிலேயே உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.