8 மின்பாதைகளில் மட்டுமே பழுது; அரை மணி நேரத்தில் சீர் - அமைச்சர் தென்னரசு சொல்கிறார்
சென்னையில் கனமழையில் எட்டு மின் பாதைகளில் மட்டும் பழுது ஏற்பட்டதாகவும் அரை மணி நேரத்தில் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் நேற்று பெய்த கன மழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக, தியாகராயர் நகர், மாம்பலம், ஆவடி, கொரட்டூர், மடிப்பாக்கம், வேளச்சேரி உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் வடியாமல் தவித்தனர். இதில் மக்களுக்குஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்ய மின்வாரியப் பணியாளர்கள் போர்க்காலப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னையில் நேற்று (29.11.2023) குறுகிய நேரத்தில் சராசரியாக 15 செ.மீ மழை பெய்த போதிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் 19.07.2023 அன்று தொடங்கப்பட்டு 29.11.2023 வரை நடைபெற்று 11,47,103 பணிகள் முடிக்கப்பட்டன. 1,545 துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளது. 6,25,341 மரக்கிளைகள் மின்வழித் தடங்களிலிருந்து அகற்றப்பட்டன. 55,830 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.”என்றும்
”சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று (29/11/2023) பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.” என்றும் தெரிவித்துள்ளார்.
கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னுாட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டது என்றும்,
சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகள் மட்டும் பழுது ஏற்பட்டது. அவையும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேற்கிய பகுதிகளளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தங்கம் தென்னரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.