இஸ்ரோவின் 9 விஞ்ஞானிகள் பெயரில் கல்வி உதவித்தொகை!

இஸ்ரோவின் 9 விஞ்ஞானிகள் பெயரில் கல்வி உதவித்தொகை!

சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.

அத்துடன், ”பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சாதனை நாயகர்களாக வந்த முனைவர் சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, முனைவர் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகார் ஷாஜி, ப. வீரமுத்துவேல் ஆகியோருக்கு முதலமைச்சர் மரியாதை செய்தார்.

தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்கள்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com