தமிழக மீனவர் 9 பேர் பலி - முரசு புயலில் சிக்கி துயரம்!

தமிழக மீனவர் 9 பேர் பலி - முரசு புயலில் சிக்கி துயரம்!
Published on: 

சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் இராமயப்பட்டினத்தை நோக்கி கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 9 பேர் முரசு புயலில் சிக்கி உயிரிழந்தனர். 

கடந்த 2ஆம் தேதி அன்று புயல் உச்சகட்டத்தில் இருந்தபோது, அவர்கள் சென்ற படகு புயலில் சிக்கி நீரில் மூழ்கியது. மீன்பிடிக்குச் சென்ற ஒன்பது பேரும் உயிர்தப்ப முடியவில்லை. 

இறந்தவர்களின் சடலங்கள் இராமாயப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கின. 

ஒன்பது பேரில் ஒருவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் சென்னை, திருவொற்றியூர் சுற்று வட்டாரத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். 

இரு மாநில மீன்வளத் துறையினரும் கடலோரக் காவல்படையினரும் தேடுதலில் இறங்கியதில் படகு கடலில் மூழ்கியது தெரியவந்தது. 

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ஒன்பது மீனவர்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடியாய் வந்து தாக்கியுள்ளது.