தமிழகத்தின் வட கடலோர எல்லையோரம் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையப் பகுதியில் விரிவாக்கப்பணி செய்யப்பட்டு வருகிறது.
மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சி பேரணம்பேடு கிராமத்தில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தனர். விரிவாக்கப் பணியில் கட்டப்பட்ட சாரம் ஒன்று இன்று இரவு சரிந்து விழுந்தது. இதில், அந்த இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
பத்துக்கும் மேற்பட்டவர்கள் வடசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐந்து பேர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளர்.
அவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இரங்கல் தெரிவித்துள்ளார்.