குல்பி ஐஸ் சாப்பிட்டு  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை 
நலம் விசாரிக்கும் ரவிக்குமார் எம்.பி
குல்பி ஐஸ் சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கும் ரவிக்குமார் எம்.பி

குல்பி ஐஸ் சாப்பிட்ட 94 பேர் மருத்துவமனையில் அனுமதி!

குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உட்பட 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ளது முட்டத்தூர். அங்கு நேற்று மாலை ஒருவர் குல்பி ஐஸ் விற்றுள்ளார். அதை சிறுவர்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு பத்து மாணி வாக்கில் குல்பி ஐஸ் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அந்த கிராமமே பதட்டத்தில் தவிக்கிறது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் 94 பேரில் 40 பேர் சிறுவர்கள். இந்த சம்வம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள விக்கிரவாண்டி காவல் துறையினர் ஐஸ் விற்ற நபரை தேடி வருகின்றனர்.

குல்பி ஐஸ்ஸில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐஸ்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில், “முட்டத்தூரில் குல்பி சாப்பிட்ட குழந்தைகள் பெரியவர் என 94 பேர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சை விவரம் கேட்டறிந்தேன். மருத்துவக் கல்லூரி முதல்வர் , மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களின் உடனடி சிகிச்சையால் எல்லோரும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து நலம் பெற்று வருகின்றனர்.” என பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com