தெருநாய் (மாதிரிப்படம்)
தெருநாய் (மாதிரிப்படம்)மெட்டா ஏஐ

ஆர்.எஸ்.பாரதிக்கு ஒரு நாயின் கடிதம்!

Published on

அன்புள்ள ஆர்.எஸ்.பாரதி அவர்களுக்கு,

வள்வள்ளுடன்.. ஸாரி வணக்கத்துடன் குரைத்துக் கொள்வது.. இல்ல இல்ல… எழுதிக்கொள்வது…

நேற்று எங்கள் தெருவில், வழக்கம்போல் சோறு போடாமல் அடித்து விரட்டிய ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து ஜன்னல் வழியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தாங்கள் நாய் கூட இப்பல்லாம் பி ஏ படிக்கிது என்று பேசியதைக் கேட்டேன். எனவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுதிடுவோம் என்று மனதில் தோன்றியதால் இந்த கடிதம்.

எங்கள் தெருவில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர் ஒருவர் இருக்கிறார். அந்தப் பெரிய மனுசன் எப்ப பார்த்தாலும் எங்களை கல்லை எடுத்து அடிக்கிறார். ஆனாலும் அந்த மனுசனுக்கு ரெண்டு வார்த்தை ஆங்கிலம் பேசத் தெரியாது. அந்த லட்சணத்தில்தான் உங்கள் படிப்புகள் இருக்கையில், அது என்ன இப்ப நாய்கூட பிஏ படிக்கிறது என்று இளக்காரமாக எங்களைப் பார்த்துச் சொல்லலாம்?

2018-இல் எங்களைப் போன்ற தெருநாய்களை கணக்கெடுத்து 1.1 லட்சம் பேர் தெருவில் இருப்ப்பதாக சென்னை மாநகராட்சி சொன்னது. எப்போதும் நாய்வண்டியில் எங்களைப் பிடிக்கவரும் ஆட்களே கணக்கெடுக்க வந்ததால் நாங்கள் ஓடி ஒளிந்தோம். இல்லையென்றால் எங்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டி இருக்கும்.

அய்யா.. ஆர் எஸ் பாரதியாரே… உங்கள் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் மாற்றி மாற்றிக் கூட்டணிகள் வைப்பதுபோல் நாங்கள் இல்லை…. ஒரு தெருவில் உள்ள எங்கள் ஆள் இன்னொரு தெருவுக்குப் போவது இல்லை… ஆட்கள் அடித்து விரட்டுவார்களோ இல்லையோ.. அந்த தெரு நாய்கள் எங்களைக் கடித்து விரட்டிவிடும். எங்கள் ஆட்கள் அப்படி மானத்தோடு வாழ்கிறோம்.

அப்படி என்ன செய்துவிட்டான் எங்கள் கட்சிக்காரன், நீங்கள் நாய்கூட என்று இளக்காரமாகப் பேச…. தெருவுக்குள் ஸ்பீட் லிமிட் தாண்டி வேகமாகப் போன பைக்காரனை விரட்டிக் கடித்தான்.. அது குத்தமா? சிறு குழந்தையை கண்காணிக்காமல் தெருவில் விட்டு விட்டு செல்போனை நோண்டினான் அப்பன்காரன். அதற்காக அந்த பிள்ளையை லேசாக விரட்டினான் என் சகோதரன் அது குத்தமா? குத்தம் என்ன செய்தான்… சுவரேறிக் குதித்து விளையாடும்போது வீட்டுப் பார்க்கிங்கில் இருக்கும் வண்டிகளின் சீட் கவர்கள் கிழிந்துவிடுகின்றன.. அதற்கு நாங்கள் என்ன செய்வது?

என் தெருவில் ஜாலியாக சுத்திய ஆண் நாய்களையெல்லாம் வலை வீசிப் பிடித்து, ஆண்மை நீக்கம் செய்து, வலி நீங்குவதற்குள் திரும்பவும் இதே தெருவில் விடுகிறீர்களே.. என்றைக்காவது இந்த மண் எங்கள் கையில் சிக்கும்.. அப்போது வைத்துக்கொள்வோம்.

உங்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் கேட்கும் சத்தத்தை விடவா எங்கள் குரைப்புச் சத்தம் அதிகம்?

ஏதோ கம்யூனல் ஜி ஓ என்றீர்களே… எங்களுக்காக ஒரு அனிமல் ஜிஓ கொண்டுவந்து ஒரு கல்லூரி கொண்டுவந்தீர்களா? அப்பத்தானே நாங்களும் கடித்திருப்போம்.. ஸாரி.. படித்திருப்போம்! குறைந்த பட்சம் எங்களில் முதியவர்கள், முடியாதவர்கள் தங்க மாநகராட்சி சார்பில் ஒரு காப்பகம் ஆவது கட்டச்சொல்லி கேட்டிருக்கிறீர்களா?

ஆர் எஸ் பாரதி
ஆர் எஸ் பாரதி

காலையில் எங்களுக்கு அஞ்சி ரூபாய் பிஸ்கெட் போட்டவனெல்லாம் பாரி வள்ளல் மாதிரி தெருவில் சுத்திக்கொண்டிருக்கும் அநியாயத்தை எங்கே சொல்வது? குறைந்தபட்சம் அந்த பிஸ்கட் உறையைக் கூட குப்பைத் தொட்டியில் போடுவது இல்லை…

அய்யா வாக்கிங் போகும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். என்னைப் போல் என் கட்சிக்காரனும் உங்கள் பேச்சைக் கேட்டிருப்பான்.. அவனுக்கு ரேபீஸ் ஊசி போட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும்…

சென்னையில் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் பதிவு செய்துகொண்டார்கள். சுமார் 3000 பேர் பதிவு செய்ததில் லேப்ரடார் இனம் மட்டும் 1246 என முதலிடத்தில் வளர்க்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தேன். இங்கிலீஷ் பேப்பரில்தான் எங்களுக்கு ஒரு புண்ணியவான் தெருவில் சோறு போடுகிறார்….. அதில்தான் படித்தேன்.

இதிலும் சாதிய வேற்றுமை பாத்தீங்களா? தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்தால் என்ன? இந்த திராவிட மாடல் அரசு அதற்கெல்லாம் ஏற்பாடுகளை முதலில் செய்யட்டும். அதன் பின்னர் நாங்கள் படிப்பதைப் பற்றிப் பேசட்டும்.

அன்புடன்

பிரவுனீ பி.ஏ ( பி.ஏ. – Barking Association)

(பிரவுனீ.... யாரோ இரக்கப்பட்டு வெச்ச பேரு.. ஆதார் கார்டெல்லாம் கேக்காதீங்க. கடிச்சி வெச்சிருவேன்)

logo
Andhimazhai
www.andhimazhai.com