தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி பிரேமாவிற்கு அறிவிக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இரண்டு நாள் பயணமாக தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தென்காசிக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடமிருந்து சிலம்பத்தை வாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றினார். சிலம்பத்தை எப்படி பிடித்து சுற்ற வேண்டும் என்றும் மாணவிகள் அவருக்கு கற்றுக் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த கழுநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவின் வீட்டிற்கு சென்றார். இவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி தரப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.
இந்த சூழலில் நேரில் ஆய்வு செய்கையில், வீட்டிற்கான அஸ்திவாரம் போடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து வீடு கட்டும் பணிகள் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.