மாடுகள் பற்றி ஸ்பெஷல் நூலகம்... அசத்தும் ஜல்லிக்கட்டு அரங்கம்!

மாடுகள் பற்றி ஸ்பெஷல் நூலகம்... அசத்தும் ஜல்லிக்கட்டு அரங்கம்!
Published on

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் வீரம் சேர்த்திருக்கிறது அந்த நூலகம்.

‘நூலகம் எல்லா ஊர்களிலும் இருப்பது தானே... அதிலென்ன சிறப்பு’ என்கிறார்களா?

சிறப்புதாங்க...!

கடந்த 2024ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அதில், அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காளைமாடுகள், பசுக்கள், எருமைகள் குறித்து படிப்பதற்காக கொளுசார்ந்த நூலகம் (Thematic Library) அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நூலகத்தில் கால்நடைகள் தொடர்பான அச்சுப் புத்தகங்கள் மட்டுமின்றி மாட்டு வாகடம் போன்ற ஓலைச்சுவடிகள், அரிய நிழற்படங்கள், குறுநூல்கள், துண்டுப்பிரசுரங்கள், வரலாற்று ஆவணங்கள், ஓவியங்கள் முதலிய ஆய்வாதார வளங்களையும் இந்த நூலகத்தில் காணலாம்.

இதில், கால்நடை மருத்துவத்தின் அச்சாரமாகக் கருதப்படும் James white எழுதிய A compendium of cattle medicine, A Treatise of Veterinary Medicine என்ற நூலும், James Mills எழுதிய The Indian Stock Owner's Manual, W.D. Gunn எழுதிய Cattle of Southern India போன்ற மிக முக்கியமான நூல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழில் புலிவலம் கோபாலய்யர் எழுதிய ஸம்ரஷண சாஸ்திரம் (1927), சு. சங்கரநாராயணப்பிள்ளை எழுதிய கோமான்மியம் என்ற பசுக்களின் மகிமை (1882) போன்ற நூல்களும் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர மேய்ச்சல் சமூகம் சார்ந்த நவீன இலக்கியங்களான வெற்றிச்செல்வன் எழுதிய குளம்படி, சு. தமிழ்ச்செல்வி எழுதிய கீதாரி, ராஜநாராயணன் எழுதிய கிடை, கி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் போன்ற இலக்கியப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

மேற்கூறிய நூல்களுக்கெல்லாம் முன்னர் ரா.ஸ்ரீ.ஸ்ரீகண்டன் எழுதிய எட்டையபுரத்துத் தேவன் என்னும் மாடுபிடி வீரனின் கதையைப் படிக்க வேண்டும் என்றால் இந்த நூலகத்துக்குத்தான் சென்றாக வேண்டும்.

அதேபோல், தமிழ்நாட்டு மாட்டு இனங்கள் பற்றிய புத்தகங்களும் இங்கு உள்ளன. அச்சுப் புத்தகங்கள் மட்டுமின்றி பழமையான இதழ்களும் உள்ளன. கால்நடை பற்றி தமிழில் வெளிவந்த ஜந்துவர்த்தமான ஸாரம் என்ற முதல் இதழும் இங்கு உள்ளது.

இவை தவிர, ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், ஒலி- ஒளி ஆவணங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவை இங்கு உள்ளன.

கால்நடைகளுக்கான தலைசிறந்த பண்பாட்டு, வரலாற்று ஆவணக் காப்பகமாக இருக்கும் நூலகத்தை மதுரைக்குச் சென்றால் போய் பார்த்துவிட்டு வாங்க!

logo
Andhimazhai
www.andhimazhai.com