வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி… நாளை தொடங்குகிறது கனமழை!

Rain
கனமழை (மாதிரிப்படம்)
Published on

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை யின் 3-வது சுற்று மழை நாளை மாலை தொடங்கி, அடுத்த மாதம் டிசம்பர் 2ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com