எடிபோன் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி ஒப்பந்தம்! - முதல்வர் மகிழ்ச்சி

எடிபோன் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி ஒப்பந்தம்! - முதல்வர் மகிழ்ச்சி

”வெற்றிகரமான ஸ்பெயின் பயணம் இன்றுடன் நிறைவடைவதாக” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது ஸ்பெயின் பயணம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப் (Gestamp), டால்கோ (Talgo) மற்றும் எடிபோன் (Edibon) ஆகிய தொழில்துறை நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் உற்சாகமான பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளோம். எடிபோனுடனான ரூ. 540 கோடி என்ற மிகப்பெரிய முதலீட்டில் ஒப்பந்தத்தை இறுதி செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நோய் எதிர்ப்பு சிகிச்சையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேப்ட்ரீ (Mabtree) என்ற நிறுவனத்துடன் பயனுள்ள விதமாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஸ்பெயினுக்கான வெற்றிகரமான பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ்ச் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com