
புதுச்சேரியில், தன்னை டெல்லி காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட மர்மநபர் ஒருவர், 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, ஒரு பெண்ணிடம் இருந்து ஆன்லைன் வாயிலாக ரூ. 52 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வீடியோ கால் அழைப்பு வந்துள்ளது. அதில் தன்னை டெல்லியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு பேசிய மர்மநபர் உங்களது செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணமா? என சோதனை செய்ய வேண்டும். அதற்கு உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் அனுப்பமாறு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.52 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.