முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்தான் - ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

Aadhav Arjuna
ஆதவ் அர்ஜூனா
Published on: 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட எஸ்.ஐ.ஆர். ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து :

"எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கும் தி.மு.க., 'எஸ்.ஐ.ஆர். டிராமா'-வைப் புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

எஸ்.ஐ.ஆர்.-ஐ ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பதுபோல் காட்டிய தி.மு.க.வின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுவதும் நடைபெற்றது.

கடந்த 2025 அக்டோபர் 27ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 23ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். பணி நடந்த காலம் முழுவதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.

"உங்கள் வாக்குகள் பறிபோகாது. தி.மு.க. முகவர்கள் உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்." என்று தி.மு.க. தலைவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இதைப் பெருமையாகப் பேசினார். அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எஸ்.ஐ.ஆர். வேலைகளை தேர்தல் ஆணையத்திற்காக தி.மு.க. தான் செய்கிறது. தி.மு.க. கட்டுப்பாட்டில்தான் எஸ்.ஐ.ஆர். வேலைகள் நடக்கின்றன." என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், எஸ்.ஐ.ஆர். என்ற அறிவிப்பு பீகார் மாநிலத்தில் நடந்தபோதே, தமிழக வெற்றிக் கழகம் அதைக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் வந்தபோதும், அதில் குளறுபடிகள் வந்தபோதும், முதற்கட்டமாக 97 இலட்சத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டபோதும்... தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக எதிர்த்தது.

அறிக்கைகள் விட்டு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல.. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு நடத்தியது தமிழக வெற்றிக் கழகம். ஆனால், எஸ்.ஐ.ஆர். வந்தபோதும், அதன் நடைமுறைகள் தொடங்கியபோதும் எதிர்த்த தி.மு.க., எஸ்.ஐ.ஆர்.இல் முதற்கட்டமாக 97 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள்... ஏறத்தாழ ஒரு கோடி பேர் நீக்கப்பட்ட நேரத்தில் ஓர் அறிக்கைகூட வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

அதன்பிறகு, இரண்டாவது கட்ட நடைமுறையில், சுமார் 27 இலட்சம் வாக்காளர்கள் மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இறுதியாக, 74 இலட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். 6.4 கோடியாக இருந்த தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 5.7 கோடியாகச் சுருங்கியது.

கடந்த 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் தி.மு.க.. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை உறுதிசெய்யப் போவது எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொண்ட தி.மு.க.வின் பி.எல்.ஏ., பி.எல்.சி., பி.டி.ஏ. எனப் பணியாற்றிய 7 இலட்சம் பேர்தான்.” என்று பேசினார்.

உரிய நேரத்தில், எஸ்.ஐ.ஆர். பணிகளில் தி.மு.க. செய்த சதிவேலைகளை முழுமையாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம்." என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com