கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டாலும், திமுக மீதான விமர்சனத்தை அவர் நிறுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று பேசிய தொல் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு இல்லை என்று கூறியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறியதாவது: “ஆதவ் அர்ஜுனா இப்படி பேசி வருவது அவருக்கு வேறு எதோ ஒரு திட்டம் இருப்பது போல் தெரிகிறது. அவருக்கு ஏதோ மறைமுக செயல் திட்டம் இருப்பது போல் தெரிகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது.” என்றார்.