வெள்ளத்துரை
வெள்ளத்துரை

கைதி ’கொலை’- ஓய்வுநாளுக்கு முன் என்கவுண்டர் சர்ச்சை வெள்ளத்துரை இடைநீக்கம்!

காவல்துறை கூறும் ‘மோதல் கொலை’ சம்பவங்களில் முக்கிய புள்ளியாக பிரபலமான கூடுதல் டி.எஸ்.பி. வெள்ளத்துரை நாளை ஓய்வுபெற இருந்தார். அவர் மீதான கொட்டடி மரண வழக்கு முடிவடையாததால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொலை செய்யப்பட்டபோது, அவரைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் காவல்துறைக் குழுவினரில் இருந்தவர் எஸ்.ஐ. வெள்ளத்துரை. அதனால் அவருக்கு இரட்டைப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அப்போதைய டி.ஜி.பி. விஜயகுமார் மூலம் என்கவுண்டர் எனப்படும் சம்பவங்களில் காவல்துறை சூட்டுக்கொலையில் இவரைப் பணியில் ஈடுபடுத்துவது அதிகமாக இருந்தது. அதன் மூலம் வெள்ளத்துரை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என காவல்துறை மூலம் முன்னிறுத்தப்பட்டு, பிரபலம் செய்யப்பட்டார். ஆனால் மனிதவுரிமை அமைப்புகளோ இவர் மீது கொலை வழக்குகள் பதியவேண்டும் என பல சம்பவங்களில் உண்மையறியும் குழுக்கள் அரசுக்குப் பரிந்துரை அளித்தன.

இப்படி சிவகங்கையில் ஒரு விசாரணைக் கைதி காவல்நிலையத்தில் தாக்கியதால் கொல்லப்பட்டதான வழக்கில், வெள்ளத்துரைக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. அதையொட்டி இவர் மீது வழக்கு பதியப்பட்டு, கிரிமினல் வழக்கு முடிவடையாமல் உள்ளது. அரசு ஊழியர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் அவர் ஓய்வுபெற முடியாது.

எனவே, தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணப் பதிவு கூடுதல் டி.எஸ்.பி.யாக இருந்துவந்த வெள்ளத்துரை, நாளை ஓய்வுபெற இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மனிதவுரிமை ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்று, சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com