பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

“தெய்வ மகன் அல்ல; டெஸ்ட் டியூப் பேபி” – மோடியை விளாசிய பிரகாஷ் ராஜ்!

”பிரதமர் மோடி தெய்வ மகன் அல்ல: டெஸ்ட் டியூப் பேபி” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா நேற்று மாலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் (அம்பேத்கர் சுடர்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் (மார்க்ஸ் மாமணி), வழக்கறிஞர் அருள்மொழி (பெரியார் ஒளி), எஸ்றா சற்குணம் (காமராசர் கதிர்), பேராசிரியர் ராஜ்கௌவுதமன் (அயோத்திதாசர் ஆதவன்), முனைவர் எஸ்.எஸ்.சிக்கந்தர் (காயிதேமில்லத் பிறை), சுப்பராயலு (செம்மொழி ஞாயிறு) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பேசத் தொடங்கிய பிரகாஷ் ராஜ், ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் பேச ஆரம்பித்தார்:

தொடர்ந்து பேசியவர், "திருமாவளவனை போல் எனக்கு கொள்கை போராட்டத்தில் நீண்ட அனுபவம் இல்லை. இருந்தாலும் ஏன் தொடர்ந்து பேசுகிறேன், நாட்டுக்கு காயம் ஏற்படும்போது நாம் பேசாமல் இருந்தால் அது அதிமாகிடும்.

நான் ஒரு கலைஞன்தான். ஆனால் என்னுடைய திறமையால் மட்டும் நான் கலைஞன் ஆகவில்லை. என்னைவிட திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். இன்னைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் என்னுடைய திறமை மட்டும் அல்ல, அது மக்களின் அன்புதான். மேடை ஏற்றிய மக்களுக்கு ஒரு பிரச்னை இருக்கும் போது, ஒரு கலைஞன் கோழை ஆகிவிட்டால் இந்த சமுதாயம் கோழை ஆகிவிடும்.

ஆகையால்தான் மன்னர் (மோடி) குறித்து பேசி வருகிறேன். இனி அவரை மன்னர் என சொல்ல முடியாது. அவர்தான் இப்போது தெய்வத்தின் குழந்தை ஆகிவிட்டாரே. இனி அவரை மனுஷனா நீ என திட்ட முடியாது. இனி தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கௌரி லங்கேஷின் தந்தை லங்கேஷ் தான் எனது ஆசான். அவர் சொன்னார், 'எதிர்க்கட்சி மக்களின் நண்பனாக இருக்க வேண்டும்' என்று. அப்படித்தான் செயல்படுகிறேன். ஜூன் 4 ம் தேதி பிறகு எனக்கு வேலை இருக்குமா என தெரியவில்லை. சிறுபான்மையினரை பாதுகாப்பது தான் பெரும்பான்மையினரின் கடமை. அம்பேத்கர் சட்டத்தை எழுதாமல் இருந்து இருந்தால் இந்த நாடு எப்படி இருந்திருக்கும் என யோசித்தால் பயமாக இருக்கிறது. " என்றார்.

மோடி குறித்து தொடர்நது பேசிய அவர், "பாசிசத்தின் சர்வாதிகாரி அவர். அவர் ஒரு புஷ்ப விமானத்தில் வருவார். மக்கள் வேலிக்கு வெளியே நிற்கிறார்கள். நின்று தான் பூ போடுகிறார்கள். அவருக்கு என்றைக்கு புரியும் நம்ம பசி. மக்களுடைய மனம் தெரியாதவர் மக்கள் வியர்வை தொடாதவர், தெய்வ மகன் இல்ல. டெஸ்ட் டியூப் பேபி" என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com