தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், கட்சி தொடங்கியபிறகு முதல் முதலாகப் பொது இடம் ஒன்றுக்கு வந்துசென்றுள்ளார். தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளான இன்று அவரின் சமாதி நினைவிடம் அமைந்துள்ள சென்னை, வேப்பேரி பெரியார் திடலுக்கு இன்று மதியம் 2 மணியளவில் விஜய் திடீரெனச் சென்றார்.
பொதுவாக, பெரியார் பிறந்த நாள், நினைவு நாள்களில் காலையிலிருந்தே பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் திடலுக்கு வந்து மரியாதை செலுத்திச் செல்வது வழக்கம். அதைப்போல இன்றும் காலையிலிருந்து மதியம்வரை ஏராளமானவர்கள் பெரியார் திடலுக்கு வந்துசென்றனர்.
தி.க. சார்பில் பிறந்த நாள் கருத்தரங்கம் அந்த வளாகத்துக்கு உள்ளேயே நடைபெற்றது. அதுவும் முடிந்து மதியம் 1.30 மணியளவில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
சிறிது நேரத்தில் விஜய்யின் கார் பெரியார் திடலில் நுழைந்துள்ளது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் மேலும் சிலர் மட்டுமே அவருடன் இருந்தனர். உள்ளே சென்றதும் திடலின் முகப்பில் உள்ள பெரிய பெரியார் சிலை முன்பாக மலர் மாலைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் விஜய்யும் மாலைவைத்தார். பின்னர் மலர்களைத் தூவியும் அவர் மரியாதை செலுத்தினார்.
திடலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் உள்ளே இருக்கும் பெரியார் சமாதிக்கும் சென்றுவருவார்கள். ஆனால் விஜய் அங்கு போகாமலேயே திரும்பிவிட்டார்.
முன்னதாக, வி.சி.க. தலைவர் திருமாவளவனும் முன்பாக உள்ள சிலைக்கு மலர் மரியாதை செலுத்திவிட்டுச் சென்றுள்ளார்.