“கூடுதல் தொகுதி முக்கியமல்ல... கொள்கைதான் முக்கியம்...!” - வேல்முருகன்

த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன்
த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன்
Published on

“எங்களுக்கு தொகுதியை விட கோரிக்கை தான் முக்கியம்.” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

செய்தியாளர்கள்: அதிமுக உங்க கோரிக்கையை ஏற்கிறோம்னு சொன்னாங்களா? பேச்சுவார்த்தை ஏதாவது நடந்ததா?

வேல்முருகன்: இல்ல, இப்பதான் முதல்முறையா நான் உங்ககிட்ட பத்திரிகையாளர் கிட்டத்தான் இந்தச் செய்தியை நான் வெளியில சொல்றேன். இப்பதான் எங்க கட்சிக்காரங்க நமக்கு சீட்டை விட தமிழ்ச் சமூகத்தின் இந்த மிக முக்கியமான உயிர்நாடி இந்தப் பிரச்சனை சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, இங்கே சிறப்பு முகாமில் அடைபட்டு இருக்கிற ஈழத்தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், இது போன்ற மிக முக்கியமான பிரச்சனை தமிழகத்திற்கு… தமிழ்நாட்டு அரசு வேலை உறுதி… இதையெல்லாம் வந்து இப்பதான் நாங்க பொது வெளியில உங்கள் மூலமாகத்தான் சொல்றோம்.

இதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் எங்களோடு கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கின்ற அரசியல் கட்சிகளோடும், கொள்கை அளவில் உடன்பட்ட அரசியல் கட்சிகளோடும் கூட்டணி தொடரலாமா, செல்லலாமா என்பதை குறித்து மாலை அமர்வில் நாங்கள் முடிவு செய்வோம்.

செய்தியாளர்: தொகுதி உங்களுக்கு முக்கியம் இல்லையா? உங்க கோரிக்கை மட்டும்தான் முக்கியமா?

வேல்முருகன்: தொகுதி முக்கியத்தை விட எங்களுக்கு கோரிக்கை முக்கியம். ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி நாங்க கோரிக்கைக்கு கொடுக்கிறோம்.

செய்தியாளர்: அதிமுக பக்கம் இப்போ பாஜக இருக்கே, ஒருவேளை அதிமுக நாங்க பண்றோம்னு சொன்னா நீங்க என்ன பண்ணப்போறீங்க?

வேல்முருகன்: பாஜக தலைமையிலான அந்த கூட்டணியில நாங்க இடம்பெற மாட்டோம்.

செய்தியாளர்: தமிழ்நாட்டுல அதிமுகவோட தலைமையிலதான கூட்டணி இருக்கு?

வேல்முருகன்: அதிமுக அப்படி சொல்லி எங்களை அழைத்துப் பேசும்போது அது குறித்து மாலை நடைபெறப்போகும் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்வோம்.

செய்தியாளர்: கடந்த வாரம் விருப்ப மனு பெற்றிருக்கீங்க தமிழ்நாடு முழுவதிலும், அது தனித்துப் போட்டியிடுவதற்கான அடையாளமா பார்க்கலாமா?

வேல்முருகன்: ஆமா, 234 தொகுதியிலும் சுமார் கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்று இருக்கின்றன. 234 தொகுதிகளிலும் அந்த வேட்பாளரே ஒரு ஓட்டுப் போட்டாலும் பரவாயில்லை, அது ஒரு ஓட்டோ, 100 ஓட்டோ, 200 ஓட்டோ, 500 ஓட்டோ, 1000 ஓட்டோ அதைப் பற்றிக் கவலை இல்லை. கொள்கை வழி நின்று மக்களைச் சந்திக்கலாம் என்கிற கருத்தும் பெருமளவில் காலையிலிருந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

செய்தியாளர்: சட்டமன்ற உறுப்பினராகவே நீங்க இந்தச் சட்டப்பேரவையிலேயே பேசுவதற்கு அந்த நேரம் குறைப்பு உள்ளிட்டவைகள் எல்லாம் இருக்கும் பொழுது, ரெண்டு நாள் கெடு விதித்திருக்கீங்க, இனிமேலும் உங்க கோரிக்கை ஏற்கப்படுமா?

வேல்முருகன்: ரெண்டு நாள் கெடு எல்லாம் நான் விதிக்கல. ரெண்டு நாளு, ரெண்டு மணி நேரம் கெடு விதிப்பதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே திமுககிட்ட குடுத்திருக்கிறோம். நாங்கள் முதலமைச்சருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு பதில் சொல்லுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று வரையில் அதற்கான பதில் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. நாளைக்கு திங்கட்கிழமை உங்களுக்குத் தகவல் சொல்லுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கட்சி வளர்ந்திருக்கிறது அதற்கு கூடுதல் இடம் கேட்கிறோம். அதே மாதிரி அதையெல்லாம் விட எங்களுக்கு இது மிக முக்கியமான பிரச்சனை.

செய்தியாளர்: “திமுகவுல வந்து இப்ப அடுத்தடுத்து நிறைய கட்சிகள் வந்து புதுசா இணைஞ்சிருக்கிறத நம்ம பார்க்கிறோம். ஒருவேளை அத காரணமா வெச்சு ஏற்கனவே இருக்கிற கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கல அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா? அதோட கோரிக்கையாதான் இதையும் அவங்க செயல்படுத்த முன்வரலன்னு நீங்க நினைக்கிறீங்களா?

வேல்முருகன்: நம்முடைய அன்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிற சங்கடத்தை நான் வந்து அறிவேன். உங்களுக்குத் தெரியும் நிறைய புதிய கட்சிகள் வந்திருக்கு, அவங்களுக்கு உரிய இடங்கள் தரணும். அதனால அந்த இடங்களைப் பத்தி எங்களுக்கு பிரச்சனை இல்லை. நான் தான் சொல்லிட்டேன் உங்களுக்கு. இடங்கள் வந்து கண்டிப்பா எங்களுக்கு கூடுதல் இடம் வேணும். நாங்க ஒன்னும் மற்ற கட்சி மாதிரி எங்களுக்கு 10 குடு, 15 குடு, 20 குடு அப்படிலாம் நாங்க கேட்கல. நாங்க கேட்கிறதே இந்த ஒரு இடத்துல நாங்க நீங்க கொடுத்திருக்கீங்க நின்னு வெற்றி பெற்றிருக்கிறோம், இன்னும் எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் இடம் கொடுங்க அப்படின்னு நாங்க சொல்றோம். அதுல வந்து கூடுதல் இடம் அது எத்தனை இடம் கொடுத்தாலும் திமுக குடுக்குறத வெச்சு கட்சியினுடைய தலைமைக்குழு கூடி முடிவெடுத்து நாங்க கூட்டணியில அவங்களோடு தொடர்வதற்கு தான் நாங்க விரும்புறோம். ஆனா அதை விட இந்தக் கொள்கை சார்ந்த விஷயம்.

கூட்டணியிலதான் அதிக கட்சி வந்துச்சு, புதிய கட்சி வந்துச்சு, அவங்களுக்கு இடம் கொடுத்துட்டோம், உங்களுக்கு சிரமம் இருக்கு எனக்கு நீங்க செய்ய முடியலன்னு சொல்றீங்க. ஒரு வாதத்திற்கு நாங்கள் அதை ஏற்றுக்கொண்டாலும், அப்ப இந்தக் கொள்கை என்ன இருக்கு?இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com