அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- அ.தி.மு.க. புறக்கணித்தது ஏன்?

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.  

சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் இடைத்தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாகவும் அதற்கான காரணங்களை விவரித்தும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தி.மு.க.வினர் அராஜகம், வன்முறைகளை நிகழ்த்தியதன் காரணமாக, 2009ஆம் ஆண்டில் இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், திருவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலையும் அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலைப் புறக்கணித்தார் என்றும்,

2006 சென்னை மாநகராட்சித் தேர்தல், 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டனர் என்றும்,

தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை முகாம்போல அடைத்துவைத்து மிரட்டினார்கள்; தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் அங்கு ஜனநாயகப் படுகொலை நடந்தது; அந்த வகையில் விக்கிரவாண்டியில் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என சந்தேகமும் கேள்வியும் எழுந்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அமைச்சர்களும், தி.மு.க.வினரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதோடு, பண பலம், படை பலத்தோடு பல்வேறு அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள்; தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பா.ஜ.க. சார்பில் பா.ம.க. போட்டியிடும் என அண்ணாமலை கூறியபோதும், ஈரோடு இடைத்தேர்தலைப் போல முறைகேடுகள் நடக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அ.தி.மு.க.வும் வழிமொழிந்திருப்பது இரண்டு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடா என அரசியல் தளத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com