அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை… அடுத்த அப்டேட்டை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தயாரிக்க உள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிக்கான குழுக்களை அமைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூடி விவாதித்தது.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடி விவாதித்தது. இதில், முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என குழு உறுப்பினர்கள் 10 பேரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துகளை பெறுவது, ஒவ்வொரு துறையிலும் செயல்படும் சங்கங்கள், தொழில்துறை சார்ந்தவர்களைச் சந்தித்து கருத்து கேட்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் நேரடியாக கருத்துக் கேட்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மண்டலங்களாகப் பிரித்து அங்கு நேரடியாக பயணம் செய்து, விவசாயிகள், தொழில்முனைவோர், மீனவர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com