அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அ.தி.மு.க பொதுக்குழு; கண்டனம் 16, வலியுறுத்தல் 7 !

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள 23 தீர்மானத்தில் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான தீர்மானங்கள்

ஊழலில் திளைத்து நிற்கும் தி.மு.க. கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாராக மந்திரம்; ஊழல் ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்.

சமூக நீதியை வாய்கிழியப் பேசும் தி.மு.க. பட்டியலின மக்களுடைய நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறித்தும்; அனுபவிக்க முடியாமல் தடுத்தும்; அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளைத் தட்டிப் பறிக்கும் வகையில் செயல்படும் விடியா தி.மு.க. அரசின் பட்டியலின மக்கள் விரோதப் போக்கிற்குக் கண்டனம்

தமிழ்க உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம். தமிழ்நாடு முழுவதும் டெங்குகாய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறியும்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறியும்; வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நோய்த் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளைச் செய்யத் தவறியும், முடங்கிப் போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சருக்கும் கடும் கண்டனம்.

அ.தி.மு.க. எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் வகையில், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட சூளுரை.

இதுபோன்ற 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.

அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com