த.வெ.க. அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரத்தை ஊக்குவிப்பது போன்று பேசியதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் அர்லேகரிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ராஜிநாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இந்நிலையில், த.வெ.க. அமைச்சர் செங்கோட்டையன், மேலும் 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைவார்கள் என்று அண்மையில் பேசியது பெரும் சர்சையானது.
இதைதொடர்ந்து, இன்று காலை ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் புகாரளிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
"ஏற்கெனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேரை, த.வெ.க. குதிரை பேரம் மூலம் வாங்கி ராஜிநாமா செய்ய வைத்துள்ளது. இதன்மூலம் இடைத்தேர்தல் கொண்டு வந்து அவர்களை மீண்டும் போட்டியிட வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க த.வெ.க. முயற்சித்து வருகிறது.
தற்போது த.வெ.க. அமைச்சர் செங்கோட்டையன், மேலும் 15 பேர் த.வெ.க.விற்கு வரவுள்ளதாக மேடையில் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரை பேரம் நடைபெற்று வருகிறது என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சான்றாக உள்ளது. குதிரை பேரம் நடத்தும் த.வெ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்." என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.