ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் வெற்றிபெற முடியாது – ஓ.பி.எஸ். பரபரப்புப் பேட்டி

“பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையாவிட்டால், அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது,” என்று அக்கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா நேற்று தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுவிட்டு சென்னைக்குத் திரும்பிய சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாழும் மக்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு 3 லட்சத்து 41 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தமிழகத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும் சூழல் இருந்து வருகிறது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொண்டர்களின் இயக்கமாகதான் உருவாக்கினார். ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றியதால்தான் 16 ஆண்டுகள் அவர் முதல்வராக ஆளும் உரிமையைப் பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. 7 இடங்களில் டெபாசிட் இழந்தது, 9 இடங்களில் 3ஆம் இடத்துக்குச் சென்றது தொடர்பாக, அ.தி.மு.க.வின் தற்காலிக பொறுப்பு ஏற்றிருக்கும் தலைமையிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜ.க. அதிக வாக்குகள் பெற்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை முழு வீச்சாகக் களத்தில் இறங்கி, 24 மணி நேரமும் வெற்றிக்காக அரும்பாடு பட்டார் என்பது முக்கிய காரணம்.

தமிழகத்தில் 60 சதவீத மக்கள்தான் அரசியல் இயக்கங்களில் உள்ளனர். பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் மனதை வென்றவர்கள், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது.” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com