அ.தி.மு.க. சார்பில் அங்கீகரிக்கப்படாமல் ஆங்காங்கே கூட்டங்கள் நடப்பதாகவும் அதை முறையாகச் செய்யவேண்டும் என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
”சில இளைஞர்கள் தங்கள் தன்னார்வத்தினால் கழகத்தின் மீது பற்றுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இத்தகைய கூட்டங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடத்த உள்ளதாக அங்கீகரிக்கப்படாத அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கழகத்தின் பெயரில் நடத்தும் நிகழ்ச்சிகளை மாவட்டக் கழகங்கள், ஐடி அணி மூலம் ஒருங்கிணைக்கக் கூறியதோடு, இளைஞர்கள் தன்னார்வத்தோடு நடக்கும் நிகழ்ச்சிகளில் சில இடங்களில் புகார்கள் வருவது குறித்து, சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்து இருந்தோம்.
இந்நிலையில், மேலும் சில புகார்கள் , பொதுச் செயலாளர் கவனத்திற்கு வந்துள்ளது.
இளைஞர்களை இணைய வழியில் ஒருங்கிணைக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் இணையதள உறுப்பினர் படிவம் விரைவில் வெளியிடப்படும். அதில் இணைந்துகொண்டு, கழகத்தின் முறையான வழிமுறைகள் வாயிலாக நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
அதுவரை, கழகத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களின் நலன் கருதி, கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, பொதுச்செயலாளர் ஒப்புதல் இன்றி நிகழ்ச்சிகள் எதுவும் ஒருங்கிணைக்க வேண்டாம்.” என்றும் அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.