கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன்
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன்

அண்ணாமலை நடை பயணத்தில் அ.தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள்: திருமா திடுக் தகவல்!

அண்ணாமலை நடை பயணத்தில் தொண்டர்களாக பங்கேற்பவர்கள் அ.தி.மு.க., பா.ம.க.வினர்தான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்; இந்து சமய அறநிலையத்துறையை மூடுவோம் என அண்ணாமலை பேசுகிறார். ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என அழைப்போம் என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது அண்ணாமலைக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் பல வாக்குறுதிகளை வாரி இறைக்கிறார்.

வி.சி.க., தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் தொடருவோம். எங்கள் கூட்டணியை நாங்கள் வலுப்படுத்துவோம்.

அ.தி.மு.க. தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது அவசியமானது. கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டே அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் வேலை. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியே பா.ஜ.க.தான்; அதிமுக இல்லை என சொன்னது. இதனை காட்டிக்கொள்ளவே அத்தனை வேலைகளையும் செய்தது பா.ஜ.க.

தமிழ்நாட்டில் உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி. ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து நடை பயணத்தை மேற்கொள்கிறார்கள் எனில், பணம் எங்கிருந்து வருகிறது? யார் தருகிறார்கள்? பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் யார்? பேரணியில் நடந்து வருகிறவர்கள் யார்? என்பதை பார்க்க வேண்டும்.

அண்ணாமலை நடைபயணம்
அண்ணாமலை நடைபயணம்

அண்ணாமலையின் நடைபயணத்தில் தொண்டர்களாக பங்கேற்க கூடியவர்கள் அ.தி.மு.க., பா.ம.க.வினர்தான். அண்ணாமலையுடன் நடப்பது பா.ஜ.க. தொண்டர்கள் இல்லை. அண்ணாமலையுடன் நடந்து போகிறவர்கள் அ.தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ம.க.வில் உள்ளவர்களை மெல்ல மெல்ல பா.ஜ.க.வின் கருத்தியலுக்கும் அரசியலுக்கும் ஏற்ப மாற்றி வருகிறார்கள். அதாவது பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அ.தி.மு.க.வுக்குதான் பெரும் சேதத்தை விளைவிக்கும்.

தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அ.தி.மு.க. ஒரு எதிர்க்கட்சி. பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வின் தயவில் வென்றவர்கள்தான். ஏனெனில் 90% அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பெற்றுதான் ஜெயித்தார்கள். பா.ஜ.க.வுக்கு கிளைகளும் இல்லை. தொண்டர்களும் இல்லை.

அ.தி.மு.க.வை விழுங்குகிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில் வட இந்திய மாநிலங்களில் கூட்டணி கட்சியினரை விழுங்கிதான் பா.ஜ.க.வினர் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர். தங்களுடன் கூட்டணி சேர்ந்த அனைவரையும் விழுங்கி செரித்திருக்கிறது. அப்படியொரு நிலை தமிழ்நாட்டில் அ.தி.க.மு.க.வுக்கு நிகழ்ந்தால், பா.ஜ.க. வலிமை பெறுவதற்கு இடம் கிடைத்துவிடும்.” என்று திருமாவளவன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com