பகிரங்கமாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சு தொடங்கியது!
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க. – அ.தி.மு.க. இடையே வெளிப்படையான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் இன்று மாலையில் அ.தி.மு.க. தலைவர்கள் அவரை சந்தித்துப் பேசினார்.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், அ.தி.மு.க. சார்பில் பா.ம.க., தே.மு.தி.க. உட்பட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை திரைமறைவாக நடந்துவருகிறது என்று இரு கட்சிகளின் தரப்பிலும் கூறப்படுகிறது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.
இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் இருந்தனர்.
தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகளான எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி ஆகியோரும் உடனிருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கூட்டணி தொடர்பாகப் பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேலுமணி, “நேரில் வந்து சந்தித்துப் பேசியிருக்கிறோம். நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.” என்றார்.