எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுக மாநாடு: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்த சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

அதிமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக, விழுப்புரம் - பொன்னுசாமி, திருப்பத்தூர் - சென்னையன், கோவை - கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, தென்காசி - வாசுதேவன், விருதுநகர் - கடற்கரை, புதுக்கோட்டை - சாம்பசிவம் ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும்; வாகனங்களில் செல்லும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.” என்று கூறியுள்ளார்.

”கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பொன்னுசாமி, சென்னையன், கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, வாசுதேவன், கடற்கரை மற்றும் சாம்பசிவம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

“வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் தலா 1,50,000/- ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற வேண்டுகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com