டிச.10இல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்– எடப்பாடி பழனிசாமி

Edapadi Palanisamy
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டு பாளையத்தில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

இதற்கிடையில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். பசும்பொன் தேவர் குரு பூஜையில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இதேபோல் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு என்பதால் அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com