சென்னையில் பதின்பருவச் சிறுமிகள் கர்ப்பிணிகளாவதும் அவர்களுக்குப் பிரசவம் ஆவதும் அதிகரித்துவருகிறது என ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அண்மையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டார தலைமை மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவமனைகளில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போதுதான் இந்தத் தகவல் தெரியவந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்த ஜகடேவிடம் அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சரவணசெல்வி, ம.சித்ரகலா, ஜெ.ஜூலியட் (தென்சென்னை), கோட்டீஸ்வரி, பாக்கியலட்சுமி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் விமலா, (வடசென்னை), ஏ.சாந்தி (மத்திய சென்னை) ஆகியோர் தங்களின் ஆய்வறிக்கையையும் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அதன் விரிவான விவரம்:
”சின்ன ஸ்டேன்லி, டைம்ஸ் ஆப் இண்டியா, பெரியார் நகர் மகப்பேறு மருத்துவமனை, ஓட்டேரி நெஞ்சக நோய் மருத்துவமனை, கேகேநகர் அரசு மருத்துவமனை, சைதாபேட்டை மகப்பேறு மருத்துவமனை, அங்குள்ள அரசு தலைமை மருத்துவமனை, ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னை ஒப்பிட இப்போது குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன.
நாளுக்கு 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வரும்நிலையில், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற ஊழியர்கள் இல்லை.
சின்ன ஸ்டான்லி மருத்துவமனை தவிர பிற இடங்களில் பிற்பகலுக்குப் பிறகு மருத்துவர்கள் இருப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட செவிலியர்களும் ஊழியர்களும் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளனர்.
பரிசோதனை கருவிகள், அறுவை சிகிச்சை அரங்குகள் உரிய மருத்துவர்களோ ஊழியர்களோ இல்லாததால் துருப்பிடித்திருக்கும் நிலையில் உள்ளது.
இரத்தம், ஆக்சிஜன், அவசரகால மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகள் இல்லை. சிறப்பு மருத்துவர்கள் இல்லை.
நோயாளிகளை மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள்.
சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். ஒரே மருத்துவர் என்பது தாய்சேய் உயிரோடு விளையாடும் செயல். உடனடியாக கூடுதல் மருத்துவர் நியமிக்கப்படவேண்டும்.
செவிலியர்கள், ஊழியர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்யும் நிகழ்வுகளும் நடந்துவருகின்றன. குழந்தைத் திருட்டுக்கும் வாய்ப்புள்ளது என தாய்மார்கள் அச்சத்துடன் கூறினார்கள். எனவே, மருத்துவமனைகளுக்கு காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனை சீரமைப்பு கொரோனா காலத்தில் தொடங்கி இன்னும் முடியவில்லை. விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.
திருவொற்றியூர் மகப்பேறு மருத்துவமனை உள்புறமாக உள்ளதால் நுழைவு வளைவு அமைத்துத்தர வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமிக்க வேண்டும். தலைமை மருத்துவமனை களில் அனைத்து வகையான பரிசோத னைகளையும் உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வில் எங்களுக்குக் கிடைத்த தகவல், 14-15 வயது குழந்தைகளும் கர்ப்பிணிகளாக வருகிறார்கள்; வயதை அதிகப்படுத்தி பதிவுசெய்கிறார்கள். இது அதிர்ச்சியும் வருத்தமுமாக உள்ளது.
அரசு பெண்கள் அமைப்புகளை இணைத்து குழந்தைக் கருத்தரிப்பைத் தடுத்துநிறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ”என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவத் துறை அமைச்சரின் தொகுதியான சைதாப்பேட்டையிலேயே இப்படியொரு புகார் எழுந்திருப்பது, குறிப்பிடத்தக்கது.