விஜய் வாக்குறுதி தந்த சிலிண்டர் என்ன ஆச்சு?- மாதர் சங்கம்

சமையல் எரிவாயு சிலிண்டர்
சமையல் எரிவாயு சிலிண்டர்
Published on

ஆளுநர் உரையில் மகளிருக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

”தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆற்றிய உரை, புதிய அரசின் கொள்கைகள், முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகும். பொதுவாக ஆளுநர் உரையில் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசின் கொள்கை நோக்கங்கள் மட்டுமின்றி, தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளும் இடம்பெறுவது வழக்கமாகும்.

குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை பாதுகாக்க அறிவிக்கப்பட்ட மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் திட்டம் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன. குடும்பப் பொருளாதார நெருக்கடி, தொடர்ந்து உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பெண்களின் வாழ்வாதாரச் சவால்கள் ஆகிய சூழலில், இந்த வாக்குறுதிகள் பெண்களின் வாழ்க்கையில் சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது.

எனவே, சட்டப்பேரவையின் முதல் ஆளுநர் உரையில் இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆளுநர் உரையில் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தோ, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் குறித்தோ எந்தத் தெளிவான அறிவிப்பும் இடம்பெறாதது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.இன்றைய பொருளாதார சூழலில் குடும்பச் செலவுகளின் பெரும் சுமையை பெண்களே தாங்கி வருகின்றனர். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்கள், தனிப்பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,கிராமப்புற பெண்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மகளிர் ஆகியோருக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் அறிவிப்புகளாக அல்லாமல் வாழ்க்கைத் தேவைகளோடு தொடர்புடைய முக்கியமான நம்பிக்கைகளாக உள்ளன.

எனவே, தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு காலதாமதமின்றி நிறைவேற்றுவதற்கான தெளிவான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும். குறிப்பாக மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தையும், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com