சிறுமிகள் பாலியல் வதை : மாதர் சங்கத்தின் கேள்விகள்

AIDWA
ஜனநாயக மாதர் சங்கம்
Published on

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று தமிழக அரசிற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் நிர்வாகிகள் ஜி.பிரமிளா, அ.ராதிகா ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

” சென்னை ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் தொடர்பான போக்சோ வழக்கில் சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கின் அனைத்து உண்மைகளும் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும்.

சென்னை ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணியால் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளியுடன் 2025 அக்டோபர் 6-ஆம் தேதியே காவல்துறைக்கு தகவலும் ஆதாரமும் அளிக்கப்பட்டுள்ளது. மறுநாளே, அக்டோபர் 7-ஆம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியிருக்க, குழந்தை யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி, இவ்வளவு முக்கியமான போக்சோ வழக்கில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஏன் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை?

ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகக் காட்டும் காணொலி காவல்துறையின் கையில் இருந்த நிலையில், விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தது ஏன்? என்ற மிக முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் சமூக அந்தஸ்து, பணபலம், அதிகாரம் என அழுத்தங்களுக்கு உட்படாமல் காவல்துறை பாரபட்சமின்றி செயல்பட்டிருக்க வேண்டும்.

காவல்துறையின் ஆரம்பகட்டச் செயல்பாடுகள், வழக்கு விசாரணையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தாமதம், அலட்சியம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளம் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பு, சட்ட உதவி, மருத்துவ, உளவியல் ஆதரவு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழந்தைகள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

எனவே, தமிழக அரசு இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.” என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com