
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தவெகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது
வரும் நவம்பர் 2ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விஜய்யின் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரை போல தமிழ்நாடு உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தசூழலில் கடந்த 27ஆம் தேதி மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்திருந்தது என்பதைக் கண்டோம் எனத் தெரிவித்துள்ளது.
SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன.
பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும்.
இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாகக் கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று தவெக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சி நிர்வாகிகளான சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோர், “அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை” எனத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.