SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது...தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 20 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வரும் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக விவாதிக்க சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கே.என்.நேரு, எ.வ.வேலு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கமல்ஹாசன், கி.வீரமணி, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், பெ.சண்முகம், வீரபாண்டியன், வேல்முருகன், கருணாஸ், நெல்லை முபாரக், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநிலக் காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி தரப்பு பாமக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்துள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com