'எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே எழுதிய புத்தகத்தை விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகளின் பணி தமிழக எல்லையோடு முடிந்து விட கூடாது. தேர்தலை சந்தித்து ஆக வேண்டும். கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கான சண்டை தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் விரும்புவதை சொல்ல வேண்டும். அவர்கள் விரும்புவதை முடிவாக எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏன் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஏன் இன்னும் கருத்து சொல்ல வில்லை என்று கேட்கிறார்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் எதிர் வினை ஆக்குவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்து இருக்கிறோம்? கூட்டணியில் இருப்பது, தேர்தல் என்பது, நமக்கு இரண்டாம் பட்சம் தான்.
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். தெளிவாக இருக்கிறோம். நாங்கள் பதற்ற பட வேண்டிய தேவையில்லை. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாமா? இந்த வாய்ப்பை விட்டால் என்னவாகும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு தம்பி, 'நீங்கள் ராமதாஸை பாலோ செய்ய வேண்டும்' என்று சொல்கிறார். எவ்வளவு ஒரு சரியான ஆலோசனை கொடுக்கிறார் பாருங்கள்!
நாங்கள் 100 விழுக்காடு அம்பேத்கரை பின்பற்றக் கூடியவர்கள். அவர் எங்களுக்கு கருத்தியல் அடையாளம். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது நமது நோக்கங்களில் ஒன்று. அந்த அதிகாரம் எதற்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது. யாருக்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது. இந்த அதிகாரத்தின் மூலம் எந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியமானது. அந்த தெளிவு இல்லாமல் நாங்கள் இந்த அரசியல் களத்தில் இல்லை. விடுதலை சிறுத்தைக் கட்சி அந்த தெளிவோடு தான் இன்னைக்கு எல்லாவற்றையும் அணுகுகிறது என்பதை பதிவு செய்கிற நிலையில் இருக்கிறோம்.
தடுமாறுகிறார் திருமா என்கிறார்கள். இதை நீங்கள் ஏதோ நடக்கிறது என்று குழம்பி விடக்கூடாது என்பதற்காக சொல்கிறேன். தடுமாறுகிறார் என்று சொல்கிறவர்களுக்காக நான் பதில் சொல்லவில்லை. உங்களுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சொல்கிறேன். அந்த நம்பிக்கையை நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும். நம்மை சமூகநீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். நம்மை பொருளாதார ரீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். இன்னும் சொல்லப்போனால், நம்மை அரசியல் ரீதியாகவும் அவர்கள் குறைத்து மதிப்பிடலாம்.
ஆனால் நமது சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நமது தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நமது கருத்தியல் நிலைப்பாட்டில் உள்ள உறுதிப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யும் அளவிற்கு தகுதி பெற்றவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. நாங்கள் எவ்வாறு கருத்தியல் களத்தில் தெளிவோடு இருக்கிறோம், துணிவோடு இருக்கிறோம். உறுதியோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தும் தேவையில்லை. அம்பேத்கர் எதிர்பார்த்த தாக்கத்தை நாம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.