
அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு “கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம்” என தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.
தவெகவின் முதல் நிர்வாகக்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்தித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் இருந்த தடைகள் குறித்து எல்லோரும் அறிவார்கள். கரூர் சம்பவம் நடந்த அன்றே நாங்கள் மக்களை சந்திக்க இருந்தோம். நான், ஆனந்த் ஆகியோர் கரூருக்கு வெளியே காத்திருந்தோம். நாங்கள் ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்போது, எங்களுக்கு வந்த தகவலின் படி அனைத்து சாலைகளும் தடை செய்யப்பட்டன. தவெக கொடி கட்டிய எந்த வண்டியையும் காவல் துறை அனுமதிக்கவில்லை. நிர்வாகிகள் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
எங்களின் முதல் குற்றச்சாட்டு காவல் துறை மீது என்பதால்தான் நீதிமன்றத்தில் முறையிட்டோம். எங்கள் கட்சியை முடக்க நினைத்தார்கள். அது கண்டிப்பாக நடக்காது. மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
எங்களுக்கு மிகப்பெரிய துக்கம் என்பது 41 பேர் இறந்ததுதான். அதுதான் எங்களை பாதித்துள்ளது. விஜய் பிரச்சார பயணம் தொடரும். அது தொடர்பான அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
விஜய் கரூர் வருவதற்கு ஏன் காலதாமதம் ஆனது என்று ஊடகங்களுத் தெரியும். விஜய்யின் வாகனத்தைச் சுற்றி 2500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இருந்தன. 1 மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு 7 மணி நேரம் ஆனது. பொதுவெளியில் வாகன போக்குவரத்தை நாங்கள் சரி செய்ய முடியுமா? அதற்குத்தானே காவல் துறையிடம் அனுமதி வாங்குகிறோம். காவல் துறை போக்குவரத்து நெரிசலை சரிசெய்யாததே தாமதத்திற்கு காரணம்.
அதேபோல், விஜய் எதற்காக காவல் துறைக்கு நன்றி சொன்னார் என்றால், வேறு எந்த ஊரில் இல்லாத வகையில், அந்த இடத்திற்கு காவல் துறை எங்களை வேகமாக கொண்டு வந்து நிறுத்தியது. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குத்தான் நன்றி தெரிவித்தார். அந்த இடத்தில் ஏன் நிறுத்தினார்கள் என்று காவல்துறை தான் சொல்ல வேண்டும். நாங்கள் கொடுத்த பணத்தை சங்கவி என்பவர் திருப்பி கொடுத்ததற்குக் காரணம், அவர்கள் வீட்டிலேயே சில பிரச்னைகள் உள்ளன. அரசே வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கே பணம் அனுப்பியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடு அற்ற கூட்டம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் என ஒப்புக்கொள்கிறாரா? எவ்வளவு காவலர்கள் அங்கு இருந்தனர்? எதற்காக தடியடி நடத்தினார்கள்? அது தொடர்பான செய்தி வந்தது. நாங்களும் அது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.
கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம்.
கரூர் சம்பவத்தில் தவெகவினர் யாரும் தலைமறைவாகவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும்தான் பங்கேற்கவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.” என்றார்.