அரசியல் சூழ்நிலை காரணமாக டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கடந்த மாதம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தினர். எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குத்தரப்படும் என அவர் பேசியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் - விசிக கூட்டணி வைக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை திருமாவளவன் கடுமையாகவே விமர்சித்து வந்தார்.
இதற்கிடையே, சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனும், விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், விசிக – தவெக கூட்டணி உறுதி என்ற வகையில் பேசப்பட்டது. ஆனாலும் விஜய்யை விமர்சிப்பதை திருமாவளவன் நிறுத்தவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விசிக இருக்கும் என்பதை திருமா மீண்டும் தெளிவுப்படுத்தினார்.
இந்த நிலையில், வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு திருமாவளவன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கின்றனர்.
விஜய்யின் திமுக எதிர்ப்பு, புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்க்கு அதிக முக்கியத்துவம் தரப்படலாம் என்பது போன்ற விவகாரங்களே திருமா இந்த நிகழ்வைப் புறக்கணிக்க காரணம் என்கின்றனர்.