அமித் ஷாவின் ரோடு ஷோ ரத்து… இதுதான் காரணமா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சிவகங்கை வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து வாகன உலா நடத்த இருந்த நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் எட்டு நாள்களே உள்ள நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாகன உலா மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் தேவநாதனை ஆதரித்து வாகன உலா மூலம் வாக்கு சேகரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமித்ஷாவின் வாகன உலா நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் பா.ஜ.க. தரப்பில் சொல்லப்படவில்லை. இதனால், மதுரையில் அமித் ஷாவின் வாகன உலா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நடத்திய வாகன உலாவுக்கு போதிய அளவு கூட்டம் வரவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அமித்ஷாவின் வாகன உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.