20 ஆயிரம் சந்துக் கடைகள்- அன்புமணி குற்றச்சாட்டு

tasmac shop
டாஸ்மாக்
Published on

தமிழ்நாட்டில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகள் இருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 

தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ளதையொட்டி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்வகையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

”தமிழ்நாட்டு மக்களின் தேவைகள் தேர்தலுக்கு, தேர்தல் மாறுபடும். இன்றைய நிலையில் நமக்கான தேவை பெண்கள் மற்றும் குழந்தைகளுகான பாதுகாப்பும், இளம் தலைமுறையை போதையின் பிடியிலிருந்து மீட்டு எடுப்பதும் தான். உண்மையில் இந்த இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள் அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை தான். வெளியில் செல்லும் பெண்களும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளும் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும், தங்களைக் காத்துக் கொள்ளப் போராடும் பெண்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்படும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. ஐந்தாண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 44,418 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிராக ரூ.62,489 குற்றங்களும் நடந்திருக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை தமிழ்நாடு கொடும் நரகமாக மாறியிருக்கிறது.

இத்தனைக் கொடுமைகளுக்கும் காரணம் தமிழ்நாட்டில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைபொருள்களின் புழக்கம் தலைவிரித்தாடுவது தான். அதிகாரப்பூர்வமாக 4,787 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றால், சட்டவிரோதமாக 20,000&க்கும் கூடுதலான சந்துக் கடைகளும், 1500&க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இன்னொருபுறம் தெருவெங்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 22 லட்சம் கிலோ விற்பனையாகும் அளவுக்கு தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் பெரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இதற்கு எதிராக ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தும் போதைப்பொருள்கள் விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை.

மாறாக, போதை வணிகம் செய்பவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்தும், கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கியும் போதை வணிகத்தை திமுகவின் முதல் குடும்பம் ஊக்குவிக்கிறது. இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com