இல்லை, இல்லை, இல்லை... விஜய் பேச்சு ஏமாற்றம் தருகிறது- அன்புமணி

Anbumani Ramadoss
அன்புமணி
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும்  உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது என்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்டம் தேர்தலுக்கு பிந்தைய பரப்புரைக் கூட்டமாகவே அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.  

”கடந்த ஜூன் 10ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அந்த விழா நடந்த மேடையிலேயே தமது அரசின் பயணம் எத்தகையதாக இருக்கும்  என்பது குறித்து உரையாற்றினார். அதன்பின் 3 வாரங்களாகிவிட்ட நிலையில், எந்த அரசு விழாவிலும் பங்கேற்று அவர் உரையாற்றவில்லை. அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

இத்தகைய சூழலில் தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி புனித ஜோசப் கல்லூரித் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அது அரசு விழா அல்ல... அரசியல் நிகழ்ச்சி தான் என்றாலும், முதலமைச்சராக விஜய் அவர்கள் பங்கேற்றும் முதல் பொது மேடை என்பதால், தமிழ்நாட்டுக்காக அவர் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பார், குறிப்பாக பெருமளவில் அவருக்கு வாக்களித்த விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு  எதிராகவே அவரது உரை அமைந்திருந்தது.” என்றும் அறிக்கை ஒன்றில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். 

”திருச்சி மாநகரை தமிழ்நாட்டின் இதயப் பகுதி என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மேலாக காவிரி பாசன மாவட்டத்தின் இதயமும் திருச்சி தான். காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் இன்றைய பெரும் கவலை குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து  வழக்கம் போல ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது தான். ஜூன் 12&ஆம் நாளுக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஒருவேளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய வசதியாக தடையில்லா மும்முனை மின்சாரம், குறுவைத்  தொகுப்புத்  திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பு திருச்சி மேடை ஆகும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.

காவிரி பாசன மாவட்டங்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது மேகதாது அணைத்  திட்டம் ஆகும். கர்நாடகத்தில் மேகதாது அணையை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்  டி.கே.சிவக்குமார், அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையிலான நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை முதல்வர்  விஜய் திருச்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள் அதை செய்யவில்லை.

காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500,  கரும்புக்கு டன்னுக்கு ரூ.4500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்பது தான். அதுகுறித்த அறிவிப்புகளும் கூட முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை.

திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்ட பாசனத் திட்டங்களில் முதன்மையானது காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும். இத்திட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வெறும் 3% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகளை  விரைவுபடுத்தி காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதும்  அந்தப் பகுதி உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த உழவர்களுக்கும் முதல்வர் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக உழவர்களுக்கு அளித்த மிகப்பெரிய ஏமாற்றம் பயிர்க்கடன் தள்ளுபடி தான். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5000 முதல் ரூ.50000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் கூடுதலான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில், வெறும் ரூ.2000 கோடிக்கும் குறைவான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நடந்த குளறுபடிகளை முதலமைச்சர் திருச்சியில் சரி செய்வார் என்று பார்த்தால், அதையும் அவர் செய்யவில்லை.

உரம் விலை உயர்வு, கொள்முதல் நிலையக் குளறுபடிகள், மணல் கொள்ளையை தடுப்பது, ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவது என ஏராளமான விஷயங்களில் முதலமைச்சரின் முத்தான அறிவிப்புகளை  உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சரோ அது குறித்தெல்லாம் எதையும் பேசாமல் எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் தேர்தல் பரப்புரையைத் தான் நிகழ்த்தினார். தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகி விட்ட பிறகும் கூட, அறிவிப்புகளை வெளியிடாமல் பரப்புரையை மட்டுமே செய்வதை ஏற்க முடியாது.

விஜய் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனியாவது உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com