சென்னைப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை அறிவிக்கை செய்ய வேண்டும்; ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும், சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யை பா.ம.க. தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு அவர் எழுதிய கடித விவரம்:
”சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள இராம்சார் தலமும், சென்னை மாநகரத்தை மழை& வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் கட்டமைப்புமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் இயற்கை அழகாகவும், அடையாளமாகவும் ஒரு காலத்தில் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதன் பொலிவையும், பரப்பையும் ஆண்டுக்கு ஆண்டு இழந்து வருகிறது. ஒரு காலத்தில் அடையாற்றில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கருக்கும் கீழாக சுருங்கிவிட்டது.
அரிய வகை பறவைகளான யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் (Eurasian Eagle Owl, Pied Avocet, Northern Shoveler, Eurasian Wigeon, Northern Pintail, Eurasian Spoonbill, Purple moorhen, Night heron, Little Cormorant, Common Coot, Yellow bittern, Black-winged Stilt) உள்ளிட்ட 115 வகை பறவைகள் லட்சக்கணக்கில் இந்த சதுப்பு நிலங்களுக்கு வலசை வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி, தனித்துவமான இறால் வகைகள், குள்ள கவுராமி (Dwarf Gourami), பாப்பான் (Chromide)) உள்ளிட்ட 46 வகையான மீன்கள், 5 வகை ஒட்டு மீன்கள், 21 ஊர்வன வகைகள் ஆகியவையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர் வாழிடமாக திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த முயற்சிகளில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. தமிழ்நாடு அரசு நினைத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மிகவும் எளிதாக மேற்கொள்ள முடியும். ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாகவே தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசுகள் அந்தக் கடமையை செய்யவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இதற்கான வாய்ப்புகள் 3 முறை அரசால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.
முதலில், இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் (The Wetlands (Conservation and Management) Rules, 2017) 2017-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதன்பின், 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி, ஓராண்டுக்குள் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குறித்து முதலில் சுருக்க அறிக்கையையும், அடுத்து வரைவு அறிவிக்கையையும் வெளியிட்டிருக்க வேண்டும். அடுத்த 240 நாள்களில் வரைவு அறிவிக்கை மீது மக்களின் கருத்துகளைக் கேட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்திருக்க வேண்டும். 2018&ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தால் கூட 2020-ஆம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை அப்போதிருந்த அதிமுக அரசு தவற விட்டு விட்டது.
அதன்பின், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உலக முக்கியத்துவம் வாய்ந்த இராம்சார் தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அந்த தேதியைக் கணக்கில் கொண்டால் கூட, 2024-ஆம் ஆண்டுக்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக, 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த இரு வாய்ப்புகளையும் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு தவற விட்டு விட்டது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசாவது இந்தக் கடமையை தவற விடாமல், உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்தல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுதல் ஆகிய இரு முதன்மைக் கடமைகளை தமிழக அரசு செய்யாததால், ஒருபுறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி, அங்குள்ள மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அறிவிக்கை செய்யப்படாதது மட்டுமின்றி, அப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (Integrated Management Plan - IMP) தமிழக அரசு அறிவிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த வகையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இதனால், ஒரு லட்சம் பட்டாதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை நிரந்தரமாகிவிடுமோ? என அவர்கள் அஞ்சுகின்றனர்.
தமிழக அரசு நினைத்திருந்தால், ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுவது மட்டுமின்றி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் அறிவிக்கை செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை நீக்கியிருக்க முடியும். அது மிகவும் எளிதானது தான். ஏனென்றால், மத்திய அரசு வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் 2025&ஆம் ஆண்டிலேயே கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதேபோல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை அளவிடும் பணிகள் 99% முடிவடைந்து விட்டதாக கடந்த ஆண்டு திசம்பர் 3&ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், அதன்பின் 10 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இப்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தங்களின் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகும் கூட, நிலைமை மாறவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம், தாக்கப்பகுதியின் பரப்பை பசுமைத் தீர்ப்பாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட 8,397 ஏக்கரிலிருந்து, 316 ஏக்கராக குறைப்பட்டு விட்டதாகவும் அதை ஏற்றுக்கொண்டு தடையை நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எந்த வகையிலும் உதவாது.
ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிடுவதுடன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் அறிவிக்கை செய்து தமிழக அரசு ஆணையிட்டால் கீழ்க்கண்ட பயன்கள் ஏற்படும்.
1. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு அகற்றப்படும் என்பதால், அங்கு குப்பைகள் கொட்டப்படாது; துர்நாற்றம் குறையும்.
2. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்; அதனால், சதுப்பு நிலத்தில் வாழும் பறவைகள், மீன்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் தீமைகள் விலகும்.
3. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் உள்ள 65 நீர்நிலைகள் தாக்கப்பகுதிக்குள் கொண்டு வரப்படும் என்பதால் அவை அனைத்தும் பாதுகாக்கப்படும். இதனால், தென் சென்னையின் வெள்ள சேதம் பெருமளவு குறைக்கப்படும். தென் சென்னையின் நிலத்தடி நீர்வளம் மேம்படும். கோடைக் காலத்தில் வெப்ப அலைகளின் தாக்கம் குறையும்.
4. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள நீர்நிலைகள் தூய்மையானதாக மாறும் போது, வலசை பறவைகள் வருகை அதிகமாவதால் பள்ளிக்கரணை இயற்கை எழில்மிக்கதாக மாறும்.
5. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுமானத் தடைகள் நீக்கப்படும். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதி அடைவார்கள்.
மேற்கண்ட நன்மைகளைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017&இன்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து அறிவிக்கை செய்தல், ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை வெளியிடுதல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ தொலைவுக்கு 6 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், 2 கி.மீ நீளத்திற்கு நடை பாதை அமைக்கும் பணிகளையும் உடனடியாக நிறுத்தி, அவற்றை அகற்றுதல், சென்னை பெருநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் (Ramsar Wetland City) பட்டியலில் சேர்த்தல் ஆகிய நடவடிக்கைகளை தங்கள் தலைமையிலான தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளையும் வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும்.” என்றும் அன்புமணியின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.