ரூ.10.62 இலட்சம் கோடி முதலீடா?- பச்சைப்பொய் என்கிறார் அன்புமணி

அன்புமணி
அன்புமணி
Published on

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்; திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில், அனைத்து முதலீடுகளும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதைவிட பச்சைப் பொய் எதுவும் இருக்க முடியாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.  

”தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலம் 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார். தாம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்; பொய்யைத் தவிர வேறெதுவுமில்லை.” என்று அவர் இன்றைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

”திமுக அரசின் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுக் கதைகள் எந்த அளவுக்கு பொய்யானவை. ஆனாலும், கோயபல்ஸ் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அதே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இந்த பொய்யை நம்ப மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் சிங்கப்பூர் பயணம் குறித்து கடந்த 20&ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி இராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும்,  2024  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன்பின் 10 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எவ்வாறு மீதமுள்ள 20 விழுக்காடு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்தன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

2024&ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அவற்றின்  மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றும் திமுக அரசு அறிவித்தது. ஆனால், ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களின் பெயர்கள், விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கூட திமுக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த விவரங்களை திமுக அரசு ரகசியமாக வைத்திருப்பதில் இருந்தே உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

80% முதலீடு வந்து விட்டது, 100% முதலீடு வந்து விட்டது என நாளொரு பொய்யையும், பொழுதொரு கதையையும் திமுக அரசு கூறிவரும் நிலையில், உண்மை நிலை என்ன? என்பதை விளக்க சில புள்ளி விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடு செய்ய முன்வந்த 10 நிறுவனங்களின் பட்டியலை மட்டும் தமிழக அரசு வெளியிட்டது. அவற்றில் டாட்டா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுவரை ரூ.3800 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது. அதுவும் கூட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன் 04.07.2022ஆம் நாள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது ஆகும்.  முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.70,000 கோடியில் ஒரு ரூபாய் முதலீடு கூட வரவில்லை.

அதேபோல், அதானி குழுமம் உறுதியளித்த  ரூ.42,768 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ உறுதியளித்த ரூ.12,000 கோடி, ஹுண்டாய் உறுதியளித்த ரூ.6180 கோடி ஆகியவ்ற்றிலிருந்து ஒரு பைசா கூட வரவில்லை. வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில் ரூ.4000 கோடி மதிப்பில் தான் தூத்துக்குடி மகிழுந்து ஆலையை அமைத்திருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.37,538 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதன் பசுமை அமோனியா ஆலைக்கு அண்மையில் தான் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நிறுவனங்கள் குறித்து எந்த விவரங்களையும்  வெளியிட மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது. திமுக அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்த நிலையில் உள்ள நிலையில், அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் திமுக அரசு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித் தான் பொய்யுரைத்து வந்தது. முதலமைச்சர்ப் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவார்; அடுத்த நிகழ்ச்சியில் 90% என்று கூறுவார்; இப்போது 98% என்று கூறி வருகிறார்.  அதேபோல் தான் இப்போது தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77%, 80%, 100% என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை  எடுக்கும்.

தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.  திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அந்த விவரங்களை வெளியிட்டு, தாங்கள் ஈர்த்த முதலீடுகளின் அளவை நிரூபிக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும் தான் திமுகவின் முதலீடு.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com