வன்னியர் போராட்டத்தில் இறந்தவர்களுக்கும் அரசு வேலை- அன்புமணி கேட்கிறார்

அன்புமணி
அன்புமணி
Published on

”கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அரசுப் பணி அளித்ததைப் போல, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

”தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் சரியானதா? என்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன என்பது உண்மை. அதைக் கருத்தில் கொண்டும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டும் பார்க்கும் போது இந்த நடவடிக்கைகள் மிகவும்  தேவையானவை.

இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் முதன்மையானவர்கள், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உட்பட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன;  அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டிக் கழிக்க முடியாது.” என்றும் அன்புமணியின் இன்றைய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com